கணித்தமிழ்ப் பேரவை மதுரையில் தொடக்கம்

         தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் சார்பில் தமிழ் மொழியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் பொருட்டு கணித்தமிழ்ப் பேரவை என்ற அமைப்பு அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் தொடக்கமாக சங்கம் வளர்த்த மதுரையில் இதன் தொடக்க விழா 05-09-2015 சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குனர் திரு.த.உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்கள் தொடங்கிவைத்தார்.IMG_8869

       இப்பேரவையின் தொடக்க விழாவில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் நா.இராஜசேகர், துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர்  முனைவர் இராமகிருஷ்ணன், எழுத்தாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இவ்விழாவினை மதுரை காமராசர் பல்கலைக்கத்தின் இதழியல் மற்றும் அறிவியல் தகவல் தொடர்பியல் துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் ஜெ.பாலசுப்பிரமணியம் மற்றும் தமிழியற் புலத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் சத்தியமூர்த்தி ஆகியோர்  ஒருங்கிணைத்தனர்.

இவ்விழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

        IMG_8884 IMG_8885

               வரவேற்புரை நிகழ்த்திய முனைவர் ஜெ.பாலசுப்பிரமணியம் பேசியபோது “பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சுப் பரவலாக்கத்தின் மூலம் தமிழ்மொழி ஓலைச் சுவடிகளிலிருந்து அச்சுக்கு நகர்ந்து பல்வேறு அறிஞர்கள், மொழி ஆர்வலர்கள் பதிப்புப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இதில் எல்லீஸ் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவராவார். சென்னை மாகாணத்தின் வருவாய்துறைத் அதிகாரியாக இருந்த அவர் தமிழ்மொழியின் மீது ஏற்பட்ட காதலால் திருக்குறளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார், பல்வேறு தமிழ் இலக்கிய ஓலைச்சுவடிகளைச் சேகரித்து அச்சிடும் முயற்சி மேற்கொண்டார். அவர் ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்னும் கருத்தாக்கத்தைத் தனது ஆய்வின் மூலம் 1816 – ஆம் ஆண்டு நிறுவினார், அதன் 200 – ஆவது ஆண்டிலே தமிழ் மொழியின் மறுமலர்ச்சிக்குக் கணித்தமிழ்ப் பேரவை தொடங்குவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. அவரைப் போலவே மொழியின் மீது ஆர்வம் கொண்ட ஒரு அதிகாரியான திரு. உதயச்சந்திரன் அவர்களே இதற்குப் பொருத்தமானவர்” என்று கூறி வரவேற்புரை நிகழ்த்தினார்.                                                                                                                                IMG_8803

சிறப்புரை நிகழ்த்திய மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் நா.இராஜசேகர் பேசும்போது “உலகில் வாழும் உயிரினங்கள் மாற்றங்களுக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டால்தான் அது உயிர் வாழும். மொழியும் அப்படியே காலத்திற்கேற்ப அதுவும் மாற்றமடைய வேண்டும். ஆங்கில மொழி பல்வேறு மொழிகளிலிருந்து சொற்களைக் கடன் வாங்கி தன்னைப் புதுப்பித்து கொள்வதால்தான் இன்றைக்கு அது பெரும்பாலான மக்களால் பயன்படுத்தக்கூடிய மொழியாக இருக்கிறது” என்று கூறினார்.IMG_8817

இதற்கு அடுத்ததாக வாழ்த்துரை வழங்கிய சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் பேசும்போது “நீண்ட நெடிய பண்பாட்டு வரலாற்றையும், தமிழ்மொழி வளர்ச்சியில் பெரிதும் பங்கு கொண்ட மதுரையில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. தமிழ்மொழியின் வரலாறு தொன்மையானது என்பது நமக்கு எல்லோருக்கும் தெரிந்த ஒரு விசயம்தான். ஆனாலும் மதுரை அருகிலுள்ள கீழடியில் தற்போது நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி தமிழ்மொழியின் தொன்மையை மேலும் பறைசாற்றும் விதமாக உள்ளது. அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் தமிழ் எழுத்துக்களைக் காணமுடிகிறது. கணித்தமிழ் என்பது ஜெ.பாலசுப்பிரமணியம் கூறியது போல ஒரு மொழி மறுமலர்ச்சி இயக்கமாகும். அது மொழியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் ஒரு செயல்பாடாகும். அதில் நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.                                                                IMG_8822

விழாவின் இறுதியில் முனைவர் சத்தியமூர்த்தி நன்றியுரை வழங்கியவுடன் தொடக்கவிழா நிறைவு பெற்றது இதைத் தொடர்ந்து தேநீர் இடைவேளைக்குப் பின்பு கணித்தமிழ் குறித்த சொற்பொழிவுகள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.IMG_8842

Advertisements